வெள்ளி, 23 மார்ச், 2018

கடன் ஏன்

கடன் ஏன், எப்படி?

கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கடன்பட்டவர்களின் மனவேதனையைப் பற்றி முன்பெல்லாம் சொல்வார்கள். ஆனால் தற்காலத்தில் எங்கும் கடன், எதற்கும் கடன் என்ற சூழ்நிலை நிலவுகிறது. நமக்கு ஜாதக கிரக அம்சத்தின் பலம் காரணமாக நம் எண்ணங்கள், கனவுகள், ஆசைகள், திட்டங்கள் எல்லாம் சரியாக நடைபெறும்போது, அதாவது நாம் ஏறுமுகத்தில் இருக்கும்பொழுது நமக்கு நிற்க நேரம் இருக்காது. நம் திறமையினால் சரியாக காய் நகர்த்தி வெற்றி பெறுகிறோம் என்ற மமகாரம், செருக்கு ஏற்படும். அதேநேரத்தில் சரிவுகள் ஏற்படத் தொடங்கியவுடன் டென்ஷன், கோபதாபங்கள் உண்டாகின்றன. எங்கும் எதிலும் நஷ்டம்,  முடக்கம் ஏற்பட்டவுடன்தான் நமக்கு கிரகம், ஜாதகம் போன்றவை நினைவுக்கு வருகின்றன. எப்பொழுது நம் கணக்குகள் சரியாக அமையாதபோது, நம் முயற்சிகள் தோல்வியைத் தழுவும்போது அதில் கிரகங்களின் கால, தசா செயல்பாடுகள் இருக்கின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இன்றைய காலகட்டத்தில் பணம் மிகவும் இன்றியமையாதத் தேவையாகி விட்டது. எல்லா தரப்பு மக்களுக்கும் பணத்தேவை அதிகரித்துக்கொண்டே போகின்றன. ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர், பரம்பரையாகச் செல்வச் செழிப்பு உள்ளவர்கள், நிரந்தர வருமானம் உள்ளவர்கள், மகா பாக்கியவான்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் கடன்சுமை ஏற்பட்டு விடுகிறது. இதில் சுப விரயமும், அசுப விரயமும் அடங்கும். ஒருசிலர் வருமானத்திற்கு ஏற்ப அகலக்கால் வைக்காமல் வாழ்க்கையை நடத்துவார்கள். சிலர், வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கடன் மேல் கடன் வாங்கி பிறரை ஒப்பிட்டு அவர்கள்போல வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். தேவையற்றதை வாங்கினால் தேவையுள்ளதை விற்க வேண்டி வரும் என்பது பிறகுதான் அவர்களுக்குப் புரியும். 

வாழ்க்கை அமைப்பு முறையில் சுபவிரயம் என்ற வகையில் முதலில் அடிப்படை செலவுகள், கல்விக் கடன், மகன், மகள் திருமணம், வளைகாப்பு, பிரசவம், வீடு கட்ட, நிலம் வாங்க, தொழில் தொடங்க, அபிவிருத்தி செய்ய, நகைகள், கார், வீண் ஆடம்பரம், வெளியூர்ப் பயணங்கள், உல்லாச, ஆன்மிக சுற்றுலாக்கள் போன்ற செலவுகளால் கடன்சுமை ஏற்படுகின்றது. அசுபவிரயம் என்ற வகையில் நோய், விபத்து, வரவுக்கு மேல் செலவு, தகாத பழக்க வழக்கங்கள், நீடித்த மருத்துவச் செலவுகள், தொழில் முடக்கம், நஷ்டம், வராத பாக்கிகள், திருமண வாழ்வில் குழப்பங்கள், வழக்குகள், வீண் வீம்புகள், தகாத சேர்க்கைகள், குடும்ப சுமை, பிள்ளைகளின் பொறுப்பற்ற செயல்கள் என பல விஷயங்கள் தேவையற்ற மனஉளைச்சலையும், கடன் சுமையையும் நமக்கு ஏற்படுத்துகின்றன. 

ஜாதக பலம், தசா மாற்றம் என்று எதாவது வகையில் திடீர் யோகம் உள்ளவர்கள், கடனில் இருந்து மீண்டு வந்துவிடுகிறார்கள். ஆனால் பெரும்பான்மையானவர்களுக்கு ஏணியில் ஏறுவதும், பாம்பில் இறங்குவதுமாக பரமபத விளையாட்டைப் போன்ற நிலையே தொடர்ந்து வாழ்க்கை முழுவதும் நீடிக்கிறது. சிலர் அகலக்கால் வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் கடன் தொல்லைகளில் இருந்து மீள முடியாமல் உருட்டல், மிரட்டல் என்று தவறான முடிவுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். வீடு, வாசல், சொத்து சுகங்களை இழந்து தெருவுக்கு வரும் அளவுக்கு கிரகங்கள் சிலரை ஆட்டிப் படைக்கின்றன.

கிரகங்களும்  நேரம் காலமும்:

நம் வாழ்க்கை என்பது கிரக சுழற்சிகளின் மூலம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விஷயமாகும். பல முக்கியமான விஷயங்களை சில சூட்சுமமான சக்திகள் நடத்தி வைக்கின்றன. அந்த விஷயங்கள் கிரக செயல்பாடுகள் மூலம் நமக்கு தெரிய வருகின்றது. திடீர் வீழ்ச்சி, கடன் சுமை, தீராத நோய் என நம்முடைய சக்திக்கு மீறி நடப்பது கிரக சேர்க்கைகள் மூலம் உண்டாகும் அமைப்பாகும். லக்னம், இரண்டாம் இடம், நான்காம் இடம், ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம், பதினோறாம் இடம் ஆகியவை நல்ல அம்சத்தில் இருந்தால் கடன்களால் தொல்லை இருக்காது, வரவும் வராது, வந்தாலும் வாழ்வாதாரத்தை  பாதிக்காது. ஏதாவது ஒரு வகையில் அவர்களின் பிரச்னைகள் தீர்ந்துவிடும். 

தனஸ்தானமான இரண்டாம் இடத்தில் நீச்ச, சுபமற்ற கிரகங்கள் இருந்து தசா நடத்துவது, 6, 8, 12ம் அதிபதிகள் சம்பந்தப்படுவது போன்றவைதான் ஒருவருக்கு பல கஷ்ட, நஷ்டங்களைத் தருகின்றன. தனகாரகன் குரு, நீசம் மற்றும் பல குறைபாடுகளுடன் இருந்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும். நீச்ச கிரகங்களான ராகு, கேது, செவ்வாய் போன்றவை சரியான யோக அமைப்பில் இல்லாமல் சனியுடன் சம்பந்தப்படும்போது பல பாதிப்புக்கள் உண்டாகின்றன. காரணம் சனி கர்ம காரகன். நம் கர்ம கணக்கின்படி கேது மூலம் பல இன்னல்கள் நமக்கு ஏற்படுகின்றன. சந்திரன், கேது சம்பந்தப்படும்போது விரக்தி மனஉளைச்சல், அலைச்சல் என்று மனரீதியான குழப்பங்கள் மூலம் நமக்கு இடையூறுகள் வருகின்றன.

சுமுகமாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடீர் வீழ்ச்சி, கடன், பண நஷ்டம், சொத்து இழப்பு உண்டாவதற்கு அந்தக்கால கட்டத்தில் நடைபெறும் தசா புக்திகளே காரணம். 6, 8, 12ம் இடம் சம்பந்தப்பட்ட தசா புக்திகளில் பலவகையான பிரச்னைகள் தலைதூக்கும். ஆறாம் அதிபதி லக்னாதிபதி, லக்னத்துடன் சம்பந்தப்படும்போது தவறான அணுகுமுறையால் கடனில் சிக்க வேண்டிவரும். உடல்நலமும் பாதிக்கப்படும். இரண்டாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது சுப, அசுப செலவுகள் வரும். குடும்பத்தில் பிரிவினை, மருத்துவ செலவுகள் உண்டாகும். மூன்றாம் அதிபதியுடன் சம்பந்தப்படும் போது சொந்த பந்தங்கள், சகோதர உறவுகளால் மனமுறிவு, கடன் வரும். நான்காம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது சொத்து பிரச்னை, தாய், தாய் வழி சொந்தங்களால் மனஉளைச்சல், நிலபுலன்கள், விவசாயம், கல்வி என பல வகைகளில் கடன் வந்து பற்றும். 

ஐந்தாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது சுபசெலவுகள், சொத்துகளை மாற்றி அமைப்பது, பிள்ளைகள் மூலம் செலவுகள் அதனால் கடன் என்று வரலாம். ஏழாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது நண்பர்கள், கூட்டுத்தொழிலில் விரயங்கள் வரும். மனைவி வகையில் கருத்து வேறுபாடுகள், மருத்துவ செலவுகள் இருக்கும். வழக்குகள், விபத்துகள் மூலம் நிம்மதி, இழப்பு வரும். எட்டாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் வழக்கு, மறதி, பொருட்கள் களவு போவது, அபராதம், எதிர்பாராத துக்க சம்பவங்கள் நிகழும். ஒன்பதாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் சொத்து, பாகப்பிரிவினை தகராறுகள், நிலம் சம்பந்தமாக வழக்குகள், ஒரு சொத்தை விற்று வேறு சொத்து வாங்குவது என்று இருக்கும். பத்தாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில் நஷ்டம், இழப்பு, கடன் என்று சுமை கூடும். உத்யோகத்தில் இடமாற்றம், பதவி இறக்கம், ஊர் மாற்றம், துறை சார்ந்த வழக்குகள் என்று தன, பண பிரச்னையால் கடன் விளையும்.

சாந்தி பரிகாரம்:

எல்லாவற்றிற்கும் நிவாரணம், சாந்தி, தடை நீக்குதல் என சாஸ்திரத்தில் பல பரிகார முறைகள் சொல்லப்பட்டுள்ளன. கடவுள் வழிபாட்டில் நட்சத்திரம், திதி, விரதம், விசேஷ தினங்கள் என பல நேர்த்திக் கடன்கள், வழிபாடுகள் செய்கிறோம். ஜாதகத்தில் உள்ள ஒவ்வொரு பிரச்னைக்கும், அதை அகற்றுவதற்கான பரிகார ஸ்தலங்கள் உள்ளன. இதைத்தவிர வைதீக ஹோம பரிகாரம், யந்திர பரிகாரம் தாந்திரீக முடிவுகளை எல்லாம் சித்தர்கள், சப்தரிஷிகள் தங்கள் நாடிகளில் சாந்தி பரிகார காண்டங்களில் சொல்லி இருக்கிறார்கள். சில பரிகாரங்கள் பொதுவானவை. சில பரிகாரங்கள் ஒவ்வொரு ஜாதகத்துக்கும் ஒவ்வொரு மாதிரியாக அமையும். கிரக அமைப்பு, கர்ம வினை, செய்வினைக்கேற்ப தனிப்பட்டவர்களுக்கு அதற்குண்டான சரியான பரிகார முறைகள் பலன் தரும். 

பலவகையான பழமரங்கள் உள்ளன. இவையெல்லாம் நமக்கு எல்லாக் காலத்திலும் பழங்களைத் தருவதில்லை. ஒவ்வொரு மரமும் அதற்குண்டான கால, நேர, பருவம் வரும்போதுதான் பூத்து, காய்த்து, கனிகளைத் தருகிறது. அதைப்போலவே நம்முடைய வாழ்க்கையிலும் எல்லாவற்றிற்கும் வேளை என்று ஒன்று வரவேண்டும். அந்த நேரத்தை நமக்கு அமைத்து வழிகாட்டுவதும் கிரகங்களே. பொதுவான பரிகாரங்களில் நமக்கு கடன்சுமை அதிகமாக இருந்தால் அந்தக் கடனில் அசல் தொகையில் ஒரு பகுதியை செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஓரை, ராகு காலம் அல்லது எமகண்டத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும். நீங்கள் எந்த கிழமையில் பிறந்தீர்களோ அந்தக் கிழமையில் வரும் குளிகன் நேரத்திலும் கடன் தொகையை திருப்பி செலுத்தலாம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியிலும் கடனை பைசல் செய்யலாம். 

பொதுவாக சுப விஷயங்களுக்கு சித்த யோகம், அமிர்த யோகம் பார்ப்பார்கள். ஆனால், நாம் வாங்கியுள்ள கடனை முடிவுக்குக் கொண்டுவர  மரண யோகம் மிகச் சிறந்தது. மரண யோகம் இருக்கும் நாளில் நீங்கள் ஒரு பகுதி கடனை திருப்பி செலுத்தினால் கடன் சுமை குறைய நல்ல வழி பிறக்கும். மரண யோகத்தில் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. பொன், பொருளை  இரவில் கொடுக்கக் கூடாது. இதைத் தவிர மைத்ர  முகூர்த்தம் என்று ஒன்று உள்ளது. அது அவரவர் தனிப்பட்ட ஜாதக அமைப்பைப் பார்த்து செய்யக்கூடிய பரிகாரம். பணம் வீணாக செலவு ஆவதை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாதமும் வளர்பிறை திருதியை அன்று இயன்ற அளவு அன்னதானம் செய்யலாம். 

வளர்பிறை வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கி வீட்டில் வைத்து பயன்படுத்தலாம். அஸ்வினி, மகம் மூலம் நட்சத்திர நாட்களில் வறுமையில் வாடுபவர்களுக்கு போர்வை வாங்கித் தரலாம். தேய்பிறை செவ்வாய்க்கிழமையன்று பசுமாட்டிற்கு கீரை, பழங்கள் தரலாம். பொதுப் பரிகாரங்கள் தவிர ஒவ்வொருவரின் ஜாதக அமைப்பின்படி எந்தக் கிரகக் கோளாறினால் ருண, ரோக, சத்ரு தொல்லை ஏற்பட்டுள்ளது, எந்த தசாவினால் பாதிப்பு உண்டாகி இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதற்குண்டான பரிகாரத்தை மேற்கொள்வதன் மூலம் உங்கள் கடன் விரைவில் தீரும். 
சனீஸ்வரன் பிடியிலிருந்து தப்பிக்க:

காக்கை சனி பகவானின் வாகனம்.காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தரும்.காக்கைகளில் நூபூரம், பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கை என சில வகைகள் உண்டு.காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காண முடியாது.எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவார் என்பது நம்பிக்கை.

அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவர். அதனால்,காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும் சனியும்திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது. தந்திரமான குணம் கொண்ட காக்கை காலையில் நாம் எழுவதற்கு முன்,காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலி பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.

தினமும் உலர்திராட்சை ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும் போது , உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,விபத்துக்கள்,வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது.

செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப் பக்கமே வராது. தீராத கடன் தொல்லைகள், புத்திர சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும், உங்கள் நியாயமான ஆசைகளும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர் வழிபாடுதான். உங்கள் முன்னோர்களுக்கே, நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்லது காகம். 

திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங்களை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து, காக்கைகளை கா…கா…என்று குரல் கொடுத்து அழைப்பார்கள். அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்து வரும். அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.

வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும்.அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும், அந்த வாழை இலையில் பொரி, பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள், வெற்றிலைப் பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க, தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்த காணுப்பிடி பூஜையைச் செய்கிறார்கள்.

இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள். மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர். இதனால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனி பகவானைத் திருப்திப்படுத்தியதாகவும் கருதுகிறார்கள். 

நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்ல பலன் உண்டு. வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிடவேண்டும். எனவே,காக்கை வழிபாடு செய்வதால் சனிபகவான்,எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்.

குலதெய்வம்

குலதெய்வம்
=========
பல வீடுகளில் எங்கு எல்லாம் கோவிலுக்கு போகிறார்களே அங்கு எல்லாம் இவர்கள் ஒரு சாமி படத்தையும் விடாமல் வாங்கி வந்து மாட்டிவிடுவார்கள். இன்னும் சில வீடுகளில் ஏகப்பட்ட சிலைகளை வாங்கி வந்து வைத்திருப்பார்கள்.

உங்கள் வீடுகளில் உள்ள பூஜை அறைகளில் உங்கள் குலதெய்வத்தின் படம் தான் முதலில் இடம் பெற வேண்டும். உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தின் படம் இருக்கலாம். தேவையற்ற படத்தை மாட்டிவைக்காதீர்கள். எல்லா சாமி படங்களையும் நீங்கள் மாட்டி வைத்தீர்கள் என்றால் நீங்கள் தினமும் அனைத்துக்கும் பூஜை செய்ய வேண்டும். உங்களுக்கு இருக்கும் வேலை காரணமாக நீங்கள் தினமும் பூஜை செய்ய முடியாமல் போகும்.

கோரமாக இருக்கும் தெய்வங்களின் போட்டோவை வைக்கக் கூடாது. அவ்வாறு செய்வதும் தவறு. அவர்களை சாந்தபடுத்துவது என்பது மிக கடினமான ஒன்றாக இருக்கும்.நீங்கள் சிலை வழிபாட்டை வீட்டில் அனுமதிக்காதீர்கள். வீடுகளில் சிலை இருக்ககூடாது.

பல சாமி போட்டோ வைத்து இருக்கும் வீடுகளில், குலதெய்வத்தை பல பேர் மறந்துவிடுகிறார்கள்.

நீங்கள் எவ்வளவு கடவுளை வழிபட்டாலும் குலதெய்வ அருள் இல்லை என்றால் நீங்கள் வாழும் வாழ்க்கையில் ஒரு திருப்தி இருக்காது. ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும்.

பூஜை அறையில் நீங்கள் அமர்ந்து கொண்டு பூஜை செய்யுங்கள். அமரும் போது ஏதாவது ஒரு விரிப்பில் அமருங்கள் உங்களின் உடம்பு பூமியில் தொடக்கூடாது. உங்களின் குறைகளை உங்களின் குலதெய்வத்திடம் சொல்லி வேண்டுங்கள் அனைத்து குறைகளையும் அந்த குலதெய்வம் உங்களுக்கு தீர்த்துவைக்கும். உங்கள் கூடவே அது வரும். நாட்கள் ஆக ஆக தான் அதன் அருமை புரியும்.

பூஜை அறையில் நீங்கள் காமாட்சி விளக்கை பயன்படுத்துங்கள். விளக்கின் திரி கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக இருக்கலாம். அவ்வாறு திரி எரியும் போது உங்களின் குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.

வீட்டை நன்றாக சுத்தம் செய்து நறுமண வாசனை வரும்படி வைத்துக்கொள்ளுங்கள்.

அமாவாசை குலதெய்வ வழிபாடு

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது

அமாவாசை அன்று உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று விளக்குஎண்ணெய் ஊற்றி இரண்டு மண்விளக்கு ஏற்றி ஒரு எலுமிச்சபழம்த்தை கோவிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்தால் நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் உங்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.இந்த வழிபாடு தொடருந்து செய்து வருவது மிகவும் நல்லது
.
குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை