சர்ப்ப தோஷம் நீக்கும் காளகஸ்திரி
தொன்மையும், வரலாற்று பெருமையும் நிறைந்த எண்ணற்ற திருக்கோயில்களை தன்னகத்தே கொண்ட புனித நகரமாக பூவுலகில் விளங்குவது ‘‘திருக்குடந்தை’’ எனப்படும் கும்பகோணமாகும்! ‘‘சகல பாவங்களும் காசியில் கரையும்... காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் மறையும். கும்பகோணத்தில் செய்த பாவம் கும்பகோணத்திலேயே தீரும்...’’ என்பது பழங்காலம் தொட்டே வழக்கில் இருந்து வருகிறது. இப்புனித நகரில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘‘மகாமகம்’’ விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. திருக்குடந்தை நகரில் ஸ்ரீ ஆதிசங்கர் பகவத்பாதர் அமைந்த ‘‘திருமடம்’’ அமைந்துள்ள தெருவுக்கு ‘‘மடத்துத்தெரு’’ என்று பெயர். அங்கு சங்கரமடத்துக்கு பக்கத்திலேயே ஸ்ரீ காஞ்சி சங்கராச்சாரியாருக்காக தஞ்சை மன்னர் ‘‘சரபோஜி’’யால் நிறுவப்பட்டதாக ‘‘அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர்’’ கோயில் பற்றி கூறப்படுகின்றது. திருப்பதிக்கு அருகிலுள்ள காளஹஸ்தி க்ஷேத்திரத்ைத போலவே இதுவும் ‘‘ராகு-கேது’’ பரிகார ஸ்தலமாக விளங்குகின்றது.
ஆலயம் கிழக்கு நோக்கியுள்ளது. ஐந்தடுக்கு கொண்ட ராஜகோபுரம். கோபுர நுழைவாயிலில் இடப்புறம் ஆனைமுகக் கடவுளும், வலப்புறம் ஆறுமுகக் கடவுள் தண்டாயுதபாணியாகவும் எழுந்தருளியுள்ளனர். இவர்களை வணங்கி உள்ளே சென்றால் இரண்டாவது கோபுரம் வரை இடைப்பட்ட நடையில் இருபுறமும் உள்ள நந்தவனத்தில் ஆலயத்து இறைவனுக்குரிய நறுமலர்கள் பூத்துக் குலுங்கி மணம் வீசுகின்றது. இரண்டாவது கோபுரத்துள் நுழைந்தால் பலிபீடம், கொடிமரம், நந்திகேஸ்வரர் உள்ளார். வடபுறம் நடராஜர், சிவகாமசுந்தரியுடன் காட்சி தருகிறார். தென்புறம் சமயக்குரவர்கள் நால்வரும் அழகுற அமைந்துள்ளனர். இவர்களை தரிசித்து வலம்வரும்போது விநாயகப் பெருமான் கன்னி மூலையில் அருள்பாலிக்கின்றார்.
தனி சந்நதியிலுள்ள விநாயகர் சக்தி மிகுந்தவர். இவரை அடுத்து தனித்தனி சந்நதிகளில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர், காசி விஸ்வநாதர்-விசாலாட்சி அருள்பாலிக்கின்றார்கள். அடுத்து வள்ளி-தேவசேனா சமேதராக சுப்ரமணியசுவாமி தனிச் சந்நதியில் அருள்பாலிக்கின்றார். அவருக்கு அடுத்து ஸ்ரீ துர்காதேவி, ஸ்ரீ லக்ஷ்மி, ஸ்ரீ சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் அருகருகே ஒரே சந்நிதியில் வழிபடுவோருக்கு அனைத்து நலன்களையும் வழங்கி அருட்காட்சி தருகிறார்கள். அன்னை மகாலட்சுமி அமர்ந்த திருக்கோலத்தில் அருளும், பொருளும் தந்து அருள்பாலிக்கிறாள். அடுத்து வடபுறகோட்டத்தில் அஷ்டதச புஜ துர்க்கை பதினெட்டு கரங்களுடன் சர்வ சக்தியாக விளங்குகிறாள்.
வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகள் ராகுகாலத்தில் அர்ச்சனை செய்து வழிபடுபவர்கள் ஏராளம். அதுவும் ஒன்பது ஞாயிற்றுக்கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபடுவோருக்கு அனைத்து பீடைகளும் தீயிலிட்ட பஞ்சு போல் ஆகி விடும். ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் நெய்யில் எலுமிச்சம்பழ விளக்கேற்றினால் திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெறும். அடுத்து ஜுரஹரேஸ்வரர்... விடாது ஜுரம் பிடித்தால் இவருக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்து, புழுங்கலரிசி கஞ்சி, மிளகு ரசம், பருப்பு துவையல் நிவேதனம் செய்து வில்வதளத்தால் அர்ச்சனை செய்தால் ஜுரம் பிடித்தவருக்கு ஜுரம் நீங்கி நலம் பெறுவதும் உண்மை. பின்னர் நவகிரகங்கள், பைரவர் இவர்களுடன் தனியாக ஒரு ‘‘ராகு பகவான்’’ உள்ளார். ராகுகாலத்தில் இந்த ராகு பகவானை வணங்கி தொழுவதால் ‘‘ராகு தோஷங்கள்’’ நிவர்த்தியாகும். பின்னர் ஆஞ்சநேயர் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கின்றார்.
அடுத்து மஹா மண்டபத்தில் நுழைந்தால் ஆலயத்தின் பிரதான சந்நதியில் அருள்மிகு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஆதி அந்தமில்லாத மூல முதல்வராய் லிங்கத் திருமேனியாக அருள்பாலிக்கின்றார். இந்த லிங்கத் திருவுருவானது ‘‘பிரம்மா, விஷ்ணு, சிவ’’ ஐக்கியமாக திகழ்கின்றது. இந்த இறைவனை வணங்கும்போது மும்மூர்த்திகளையும் வணங்கிய பேறு கிட்டும். காளஹஸ்தீஸ்வரரை பற்றிய சிறப்புச் செய்திகளும் உண்டு. ராகு-கேது தோஷ நிவர்த்திக்கு திருக்காளத்திக்கு செல்ல இயலாதவர்கள் இங்கு அந்தப் பரிகாரத்தை செய்து அளவற்ற நற்பயனை பெருகிறார்கள். அதே மகா மண்டபத்திலிருந்து வலப்பக்கம் திரும்பினால் அன்னை பராசக்தி அருள்மிகு ‘‘ஞானாம்பிகை’’ எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறாள். தெற்கு நோக்கிய திருமுகம் இம்மையும், மறுமையும் அளுரும் அம்பாள் அபயஹஸ்தமும், மலரும், அக்ஷ்ய மாலையும் ஏந்திய திருக்கரங்களுடன் கருணையே வடிவாக அருள்பாலித்து வருகின்றாள்.
இங்கு உற்சவமூர்த்தியாக விளங்கும் ஸ்ரீ காத்யாயினி சமேத, கல்யாண சுந்தரேஸ்வரர் அம்பாள் சந்நிதிக்கு அருகில் தனியாகக் கோயில்
கொண்டுள்ளனர்கள். மேலும் சோமாஸ்கந்தருக்கு மூன்று அம்பாள் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இக்கோயிலுக்கு அருகிலுள்ள காவிரியின் பகவத் படித்துறைதான் தீர்த்தம். ‘‘பலா மரம்’’ ஸ்தல விருட்சம். இக்கோயிலில் ஐந்து கால பூஜை மிக சிறப்பாக நடைபெறுகின்றது. காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 8.30 வரை. திருக்கோயிலின் நடை திறந்திருக்கும்.